தேர்தல் பத்திரங்கள்: 2 ஆம் பாகம்
Governance

தேர்தல் பத்திரங்கள்: 2 ஆம் பாகம்

தேர்தல் ஆணையத்தின் ரகசிய ஆலோசனைக் கூட்டம் பற்றிய தகவல் மோடி அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்த பொய்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது

Nitin Sethi

Nitin Sethi

நிதி அமைச்சக அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தைத் திட்டமிட்டு ஏமாற்றினார்கள் என்று ஒரு ரகசிய குறிப்பின் படி தெரிய வருகிறது.

அரசியல் கட்சிகளின் நிதிப் பெட்டகங்களில் பெரு நிறுவனங்களின் பணம் அநாமதேய முறையில் கொண்டு குவியச் செய்யும் வழியை சட்டமாக்குவதற்காக நரேந்திர மோடியின் அரசாங்கம் தேர்தல் ஆணையத்தின் தீவிரமான ஆட்சேபணைகளை நிராகரித்ததுடன் , பாராளுமன்றத்தில் பொய்களை அவிழ்த்து விட்டு, இறுதியில் அவசர கோலத்தில் அவற்றை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது வெளியிட்ட தவறான விளக்கங்கள் வெட்ட வெளிச்சமாயின.

இந்திய ஜனநாயகத்தின் அதி உன்னத பீடமான பாராளுமன்றத்தில் அன்றைய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தேர்தல் பத்திரங்கள் பற்றி பொய் கூறி சிக்கிக் கொண்டபோது, அவரைக் காப்பாற்ற மூன்று உயர் அலுவலர்கள், ஆறு திரிக்கப்பட்டஅறிக்கைகளை தயார் செய்தது இதுவரை வெளியிடப்படாத சில ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.

தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல்கள் அளித்து, தேர்தல் பத்திரங்கள் பற்றி ஆணையத்தின் தீவிர எதிர்ப்பை மழுங்கச் செய்ய உயர் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு அது தோல்வி அடைந்தது என்பது இந்த ஆவணங்களில் அடங்கிய ரகசிய குறிப்பு ஒன்றின் மூலம் வெளிப்படுகிறது.

இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைகள் மட்டுமே நிராகரிக்கப்பட்டன என்றில்லை. எல்லா எதிர் கட்சிகளிடமும் இந்த விஷயத்தில் ஆலோசனை கேட்பது போல் போக்கு காட்டி விட்டு அவர்களிடமிருந்து பதில் வரக் காத்திராமலும் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமலும் இந்த திட்டத்தை வரைவு செய்வதில் அரசு தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டது.

முதன் முறையாக 2017ல் அப்போதைய நிதி அமைச்சர் ஜெயிட்லியால் அறிமுகப் படுத்தப் பட்ட, பெரும் சர்ச்சைக்குரிய இத்திட்டம் , பெரு நிறுவனங்கள் , அறக்கட்டளைகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் தனி மனிதர்கள் ஆகியோர் அரசியல் கட்சிகளுக்கு எல்லையற்ற அளவில் நிதி வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்த வழி செய்கிறது. இப்போது வெளியாகியுள்ள ஆவணங்களை முழுமையாகப் படித்தால், இந்த விஷயத்தில் மோடி அரசின் இரட்டை வாக்கு அப்பட்டமாகிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் முதன் முதலில் குவிந்த தொகையில் 95% ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றதாக அஸோஸியேஷன் ஃபர் டெமாக்ரேடிக் ரிஃபார்ம்ஸ் என்ற அமைப்பின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

உச்ச நீதிமன்றம் இந்த பத்திரங்கள் சட்டபூர்வமானவையா என்பது பற்றிய மனுவை விசாரித்து வருகிறது. தகவல் அறியும் உரிமையின் கீழ் வெளிப் படைத்தன்மை ஆர்வலர் காமடோர் லோகேஷ் பாத்ராவால் பெறப்பட்ட ஆவணங்கள், இந்த விஷயத்தில் அளிக்கப்பட்ட அரசின் வாக்குறுதிகளும் பேச்சுக்களும், பாராளுமன்றத்தில் வெளியிடப் பட்டிருந்தால் கூட, நம்பிக்கைக்கு உரியவை அல்ல என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கின்றன.

2018-ன் பாராளுமன்ற குளிர்காலத் தொடரில் மாநிலங்களவை உறுப்பினர் முகமது நாதிமுல் ஹக், இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் பற்றி ஏதாவது கவலைகளைத் தெரிவித்ததா என்று ஓர் எளிய கேள்வியை எழுப்பினார்.

அப்போது நிதித் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல் ‘பேரர்’ பத்திரங்கள் (bearer bonds) வெளியீடு சம்பந்தமாக தேர்தல் ஆணையத்திடம் இருந்து கவலை தெரிவிக்கும் தகவல் எதுவும் அரசினால் பெறப்படவில்லை என்று கூறினார்.

இது பொய்யென்று வெளிப்படைத் தன்மை ஆர்வலர் பாத்ராவாலும் அரசுத் துறைகளின் செய்தி பரிமாற்றங்கள் பற்றிய விவரங்களாலும் தெள்ளத் தெளிவானது. தான் எழுப்பிய கேள்விக்கு பொய்யான தகவலை பாராளுமன்றத்திற்கு அளித்ததன் மூலம் உரிமை மீறல் நிகழ்ந்துள்ளதாக ஹக் புகார் எழுப்ப இந்தத் தகவல் ஊடகங்களை சென்றடைந்தது.

பாராளுமன்றத்தில் ராதாகிருஷ்ணனால் உரைக்கப் பட்ட பொய்யான தகவலிலிருந்து மீள அரசு என்ன செய்தது என்பதை இப்போது நம்மால் வெளிப் படுத்த இயலும். சலுகை மீறல் புகாருக்கு அரசின் பதில் கூட நேர்மையானதாக இல்லை. இவை அனைத்தின் அடிப்படையில் எழும் ஒரே கேள்வி: தேர்தல் ஆணையத்தின் எதிர்ப்பை அடக்குவதில் அரசு காட்டிய அதீத ஆர்வத்தின் காரணம் என்ன?

மின் அஞ்சல் மூலம் நிதி அமைச்சகம் அளித்த பதிலில், அடுத்த நிதி ஆண்டின் யூனியன் வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதால் குறிப்பிட்ட கேள்விகளுக்கு விவரமான பதில் தரும் நிலையில் இல்லை என்றும் ஆனால் எல்லா முடிவுகளும் நல்லெண்ணத்துடன் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டது.

“மின்னஞ்சலில் எழுப்பப்பட்ட எல்லா கேள்விகளும், அந்த நேரத்தில் இருந்த தகுதியுள்ள அதிகாரிகளால் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றியவை. அரசு துறைகளில் எல்லா முடிவுகளும் நல்லெண்ணம் மற்றும் பொது நலன் ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. அவற்றின் மீது வெவ்வேறு கோணங்களில் மேல்விளக்கங்கள் வெவ்வேறு விதமாக அமையக் கூடும். எனவே தீர்மானம் எடுக்கப்பட்ட பொழுது கருத்தில் கொள்ளப் பட்ட எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டே விளக்கம் அளிக்க இயலும்” என்று நிதி அமைச்சகம் பதில் அளித்தது.

தேர்தல் ஆணையத்தின் ஆட்சேபணைகள் மூடி மறைப்பு

2017 மே மாதத்தில் தேர்தல் ஆணையம் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் தேர்தல் பத்திரங்கள் வெளி நாட்டிலிருந்து அரசியல் கட்சிகளால் சட்ட விரோதமாக பெறப்படும் தொகைகளை மறைக்க உதவியாக அமையும் என்று குறிப்பிட்டது.

சந்தேககரமான கொடையாளர்கள் “ஷெல்” நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் கறுப்புப் பணத்தை அரசியல்வாதிகளுக்கு அளிக்கவும், நிதிகளின் உண்மையான மூலம் எது என்பதை மறைக்கவும் உதவும் என்று எச்சரித்தது.

ஆணையம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவதில் வெளிப்படைத்தன்மையை குறைக்கும் வகையிலான தேர்தல் பத்திரங்கள் மற்றும் சட்ட மாற்றங்களை திரும்பப் பெற வற்புறுத்தியது.

தேர்தல் பத்திரங்கள்: 2 ஆம் பாகம்
தேர்தல் பத்திரங்கள்: 2 ஆம் பாகம்
தேர்தல் பத்திரங்கள்: 2 ஆம் பாகம்

2017 ஜூலை 03 அன்று, சட்ட அமைச்சகம் தேர்தல் ஆணையம் வெளிபடுத்திய கவலைகளை நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறைக்கு அனுப்பியது. ஆனால் நிதி அமைச்சகம் அது பற்றி ஒன்றும் கேள்விப் படாதது போல பாசாங்கு செய்தது.

ஆணையத்தின் அடிப்படை கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு பதிலாக நிதி அமைச்சர் ஜெயிட்லி, தேர்தல் பத்திரங்களின் முடிவான அமைப்பை தீர்மானிப்பதற்காக ரிசர்வ் வங்கி மற்றும் தேர்தல் ஆணையத்துடன் ஒரு கூட்டத்திற்கு ஆணையிட்டார்.

தேர்தல் ஆணையத்தின் கடும் எதிர்ப்பு இருந்தபோதும் அரசியல் கட்சிகளுக்கு ரகசிய முறையில் நிதி குவியும் திட்டம் குறித்த தன்னுடைய எண்ணத்தை சற்றும் மறு பரிசீலனை செய்யாமல் அரசு தன் வழியில் தீவிரம் காட்டியது.

ஜெயிட்லி உத்தரவின்படி கூட்டம் 2017 ஜூலை 19-ல் நடந்தது. அதில் தேர்தல் ஆணையத்தின் இரண்டு அதிகாரிகள் பங்கெடுத்தனர். அரசின் திட்டம் அரசியல் கட்சிகளுக்கு சம வாய்ப்பு அளிக்கும் என்றும் அரசியல் நிதி திரட்டலில் வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும் என்றும் வலியுறுத்தித் தான் அவர்களுக்குத் தெரிவித்ததாக பொருளாதார விவகாரத் துறை செயலர் எஸ்.சி. கார்க் தன் அலுவலக கோப்பில் பதிவு செய்து கொண்டார். ஆனால் தேர்தல் ஆணையத்திடம் மனமாற்றம் ஏற்படவில்லை என்பதை சட்டம் மற்றும் நீதித் துறையின் ஆவணங்கள் காட்டுகின்றன.

செப்டம்பர் 22, 2017 அன்று நிதிஅமைச்சருக்கு கார்க் அவர்களால் ரகசியம் என்று குறிப்பிட்டு எழுதப்பட்ட குறிப்பு அவர் ஜூலை 28, 2017 அன்று அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் அவர்கள் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஓம் பிரகாஷ், சுனில் அரோரா ஆகியோரை சந்தித்ததை பற்றி கூறுகிறது.

நிறுவனங்கள் தங்களது கணக்குகளில் தேர்தல் பத்திரங்கள் வாங்கியது பற்றி பதிவு செய்யும் என்றும் அவை அந்த நிதிகளின் மூல ஆதாரத்தையும் அரசியல் கொடைகளின் அளவையும் பற்றி முழு வெளிப்படைத் தன்மையை நிலை நிறுத்தும் என்றும் ஆணையர்களிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இது பொய்.

நிறுவனங்கள் தாங்கள் தேர்தல் பத்திரங்களில் செய்தமுதலீட்டை தங்களது லாப-நஷ்ட கணக்கிலும் பேலன்ஸ் ஷீட்டிலும் காட்ட வேண்டிய அவசியமில்லை. ஆண்டு இறுதியில் அரசுக்கு கொடுக்கப் படும் ஒட்டுமொத்த லாப-நஷ்ட கணக்கு, மற்றும் பேலன்ஸ் ஷீட் மட்டுமே பொது மக்களின் பார்வைக்கு கிடைக்கும்.

அனாமதேய முறையில் நிதி அளிப்பது கொடையாளர்களுக்கு அதிகப் படியான சுதந்திரத்தையும் அரசியல் கட்சிகளுக்கிடையே சம நிலையையும் உருவாக்கும் என்று தேர்தல் ஆணையர்களுக்கு தான் விளக்கியதாக கார்க் கூறியுள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் திட்டம், கருப்பு பணத்தை அரசியல் கட்சிகளுக்கு ஷெல் கம்பெனிகள் மூலமாக அளிக்க உதவி செய்யும் என்பது உட்பட தேர்தல் ஆணையர்கள் இந்த கூட்டத்தின் போது நேரடியாக கவலைகள் தெரிவித்ததும் வெளிப்படைத் தன்மையை உயர்த்தும் வகையில் மாற்றங்கள் அரசினால் செய்யப்படவேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்ததும் இந்த ரகசியக் குறிப்பில் இருந்தே புலப்படுகிறது.

இருந்தபோதிலும் அரசியல் நன்கொடைகள் விஷயத்தில் நியாயமான மற்றும் வெளிப்படையான நடைமுறையாக தேர்தல் பத்திரங்கள் அமையும் என்று தேர்தல் ஆணையர்கள் போதுமான அளவு திருப்தி அடைந்தார்கள் என்று தான் புரிந்து கொண்டதாக அவர் பதிவு செய்துள்ளார்.

இதுவும் முற்றிலும் உண்மைக்கு புறம்பான கூற்று.

தேர்தல் பத்திரங்கள்: 2 ஆம் பாகம்
தேர்தல் பத்திரங்கள்: 2 ஆம் பாகம்
தேர்தல் பத்திரங்கள்: 2 ஆம் பாகம்

அக்டோபர் 2018-ல் கூட தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தையும் வெளிப்படைத் தன்மைக்குப் புறம்பான மாற்றங்களையும் திரும்பப் பெறும்படி வற்புறுத்தியதாக சட்ட மற்றும் நீதித் துறையின் பதிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தவை குறித்து கருத்து கோரி சட்ட அமைச்சகம் அனுப்பிய நினைவூட்டல்களையும் நிதி அமைச்சகம்தொடர்ந்து அலட்சியப் படுத்தியது.

தேர்தல் ஆணையத்தின் எதிர்ப்புகள் பற்றி நிதி அமைச்சகம் தெரிந்து வைத்திருந்தது என்பதை தேர்தல் ஆணையத்துடனான நேருக்கு நேரான சந்திப்புகள் மற்றும் தகவல் தொடர்புகள் விவரங்கள் தெளிவு படுத்துகின்றன.

அப்படியானால் நிதி துறை இணை அமைச்சர் ராதாகிருஷ்ணன் 2018 பாராளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஹக்கின் கேள்விக்குப் பதில் அளிக்கையில் தேர்தல் ஆணையத்தில் இருந்து எந்தக் கவலையும் தெரிவிக்க படவில்லையென்று ஏன் பதில் சொன்னார் என்பது குழப்பத்தையே உண்டாக்குகிறது.

தேர்தல் ஆணையம் சட்ட மற்றும் நீதித் துறைக்கு தனது ஆட்சேபணைகளைத் தெரிவித்த விவரங்கள் வெளிப்படைத் தன்மை ஆர்வலர் பாத்ரா வெளிப்படுத்திய தகவல் மூலம் ஊடகங்களில் வெளியாயின. இதனடிப்படையில் ஹக் எழுப்பிய உரிமை மீறல் பிரச்சனை நிதி அமைச்சகத்தின் பதிலுக்காக மாநிலங்களவையின் செயலகத்தால் அனுப்பப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திற்கு தவறான தகவல் ராதாகிருஷ்ணன் அளித்ததாக குற்றச்சாட்டு எழ , பாதுகாக்க இயலாத ஒன்றை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு நிதி அமைச்சகம் தன்னை சுற்றி பெரும் சிக்கலைத் தானே உருவாக்கிக் கொண்டுள்ளது.

உண்மையை மறைப்பதற்காக, ஒன்றிற்கு அடுத்து ஒன்றாக, பல பொய்கள் திரிக்கப் பட்டுள்ளன.

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை முதலிலிருந்தே கையாண்டு வந்த உதவி டைரக்டர் விஜய குமார், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் கார்க் தேர்தல் அதிகாரிகளை நேரில் சந்தித்திருந்த போதும் தேர்தல் ஆணையம் தங்கள் கவலைகளை எழுத்தில் கொடுக்கவில்லை என்றும் அதனால் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் கூறியது பொய் என்று கூற முடியாது என்றும் தன் உயர் அதிகாரிகளுக்கு ஜனவரி 1, 2019-ல் அறிவுறுத்தி உள்ளார்.

தேர்தல் பத்திரங்கள்: 2 ஆம் பாகம்

பொருளாதார விவகாரங்கள் காரியதரிசி கார்க் அதிகாரவர்க்க பாணியில் இன்னமும் உயர்வான மதிநுட்பமான ஒரு விளக்கம் அளித்தார். முதலில், பாராளுமன்றத்தில் ராதாகிருஷ்ணன் சொன்னது தவறான கருத்தென்று அவர் ஒப்புக் கொண்டார்.

"கொடுக்கப் பட்ட பதில் நீரோட்டம் போல் தொடர்ச்சியாக உள்ளது. தேர்தல் ஆணையத்தில் இருந்து எந்த கவலையும் அரசுக்குத் தெரிவிக்கப் பெறவில்லை என்று கூறப் பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டவற்றின் அடிப்படையில், நிதி அமைச்சகம் எந்த கவலையும் தெரிவிக்கப் பெறவில்லை என்று குறித்திருந்தால் அது சரியாக அமைந்திருக்கும், " என்று பதிவு செய்துள்ளார்.

அவர் மேலும் இரண்டு பரிந்துரைகள் கொடுத்தார்.

“பாகம் (d) மற்றும் (e) குறிப்பிடப்படும் அரசு என்பது நிதி அமைச்சகம் என்று மந்திரிக்கு விளக்கவும் அல்லது இந்த விஷயத்தில் பாராளுமன்றத்தில் சரியான உண்மை பற்றிய விளக்க அறிக்கை அளிக்கலாம்.” - என்று குறிப்பிட்டார்.

கார்கின் கீழ்நிலை அலுவலர், பட்ஜெட் பிரிவின் இணை காரியதரிசி மந்திரி ராதாகிருஷ்ணன் பொய் கூறவில்லையென்பதற்கு மூன்று புதுமையான விளக்கங்கள் கொடுத்தார்.

அவற்றில் இரண்டு அதிகாரவர்கத்தின் தனிப்பட்ட மொழி விளக்கங்கள், மூன்றாவது உண்மையை மறைக்கும் முயற்சி.

"தேர்தல் பத்திரங்கள் பற்றிய எந்தக் கவலைகளும் தேர்தல் ஆணையத்தால் நிதி அமைச்சகத்துக்கு அதிகார பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. பத்திரிகைகள் தேர்தல் ஆணையத்தின் மே 26, 2017 தேதியிட்ட கடிதத்தைக் குறிப்பிடுகின்றன. அது நிதி அமைச்சகத்தால் பெறப்படவில்லை. எனவே அது சம்பந்தமாக விசாரிக்க நிதி அமைச்சகத்துக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை," என்று அவர் சொன்னார்.

ஆனால் மற்ற ஊடகங்கள் தெரிவித்தபடி தேர்தல் ஆணையத்தின் கடிதம் நிதி அமைச்சகத்தால் பெறப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் திட்டத்திற்கு வித்திட்ட பிரிவிலும், இந்தப் பொய்களை உருவாக்கிய பிரிவிலும் கூட இந்தக் கடிதம் பெறப்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக கார்க் ஜுலை 28, 2018 அன்று தேர்தல் ஆணையத்தின் தயக்கங்களைப் போக்கும் நோக்கத்துடன் தேர்தல் ஆணையர்களை நேரில் சந்தித்துள்ளார். ஆனாலும் இந்தப் பிரச்சனையை பாராளுமன்றத்தில் எதிர் கொள்வது என்று கார்கும் நிதி அமைச்சர் ஜெயிட்லியும் முடிவு செய்தனர்.

தேர்தல் பத்திரங்கள்: 2 ஆம் பாகம்
தேர்தல் பத்திரங்கள்: 2 ஆம் பாகம்

எனவே, ஜனவரி 12, 2019 மாநில நிதி அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஹக் அவர்களுக்கு பதில் அளித்தார், அதில் "தேர்தல் ஆணையத்திலிருந்து தேர்தல் பத்திரங்கள் பற்றிய எந்த கவலைகளும் அதிகார பூர்வமான முறையில் நிதி அமைச்சகத்தால் பெறப் படவில்லை என்று குறிப்பிட்டார்.

பதிலில் அரசு என்பது நிதி அமைச்சகத்தைக் குறிப்பிடுகிறது. தேர்தல் பத்திரங்கள் திட்டமிட்ட குறிக்கோள்களை அடையக் கூடிய அளவு வெளிப்படைத் தன்மை கொண்டவை என்றும் மேன்மை மிகு பாராளுமன்றத்தை தவறாக வழி நடத்தும் எந்த முயற்சியும் இல்லையென்றும் உறுதியளிக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.

தேர்தல் பத்திரங்கள்: 2 ஆம் பாகம்

வெளிப்படைத் தன்மை ஆர்வலர் பாத்ரா இந்த பொய்யையும் வெளிக்கொண்டு வந்தார்.

ஜுலை 03, 2017 அன்று சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்தின் மூலம் நிதி அமைச்சகம் தேர்தல் ஆணையத்தின் ஆட்சேபணைக் கடிதத்தைப் பெற்றுள்ளது என்று கண்டுபிடித்தார்.

இந்தக் குறிப்பிட்ட கடிதம் தேர்தல் பத்திரம் வெளியிடுவது பற்றி சம்பந்தப்பட்ட எல்லா துறைகளுக்கும் பிரிவுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

பொருளாதார விவகாரங்கள் துறையின் கீழ் தேர்தல் பத்திரங்கள் வெளியீட்டை செயலில் கொண்டு வருவதற்கான வேலைகளை சரி பார்த்து வந்த, 'நிதிப் பிரிவு சீர்திருத்தங்கள் மற்றும் சட்ட மயமாக்குதல் பிரிவு' இந்தக் கருத்துக்களை ஆமோதிக்கவும் செய்திருக்கிறது.

ஆயினும் ஆணையத்தின் ஆட்சேபனைகளுக்கு நிதி அமைச்சகம் எந்த பதிலும் அனுப்பவில்லை. அவ்வாறு அனுப்பியிருந்தால் , ஆணையம் நடை முறை பற்றி மட்டுமல்லாமல் தேர்தல் பத்திரங்கள் பற்றிய நோக்கு மற்றும் அடிப்படை குறித்தே கருத்து வேறுபாடு கொண்டிருந்தது என்பது வெளிப்படியாகி இருக்கும்.

பொருளாதார விவகாரங்கள் செயலாளரை நேரில் சந்தித்த பிறகும் தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது என்று புரிகிறது.

மார்ச் 2019 ல் தேர்தல் ஆணையம் உச்ச நீதி மன்றத்தில் தேர்தல் பத்திரங்களுக்கான தன் எதிர்ப்பைத் தெரிவித்து ஒரு மனு சமர்ப்பித்த போது அதன் தொடர்ந்த ஆட்சேபணைகள் வெளிப் பட்டது. ஆனால் அதற்குள் ரூபாய் 1400 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் பெரு நிறுவனங்களால் வாங்கப் பட்டு அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டு விட்டன.

ஆகஸ்ட் 2019-ல் பொறுப்பேற்றுக் கொண்ட புது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்த சிக்கலுக்கு ஒரு முடிவு கட்ட முனைந்தார்.

பாராளுமன்றத்தில் ஹக்கின் கேள்விக்கு ஒரு திருத்தப்பட்ட பதில் அளித்தார். இந்தத் திருத்தப்பட்ட பதில் பாராளுமன்ற நிகழ்வுகளில் பதியப்பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் சம்பந்தமாக தீவிரமான கேள்விகளை எழுப்பியது ஒப்புக் கொள்ளப் பட்டது. இந்த முறை நிதி அமைச்சகம் உண்மையை மறைக்க அதி நுட்பத்தை பயன்படுத்த முயற்சிக்கவில்லை.

ஆனால் நிர்மலா அவர்கள் சாமர்த்தியமான முறையில் ஹக்கின் மற்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்தார். உதாரணமாக: தேர்தல் ஆணையத்தின் கருத்துக்களை சந்திக்க அரசு என்ன முயற்சி எடுத்தது? பதிலாக, இரண்டு ஆண்டுகளாக அரசு நடத்தி வந்த தேர்தல் பத்திரங்களின் அம்சங்கள் பற்றி வெட்டி ஒட்டி தயாரிக்கப்பட்ட உரை நிகழ்த்தினார்.

யார் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்?

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை முன்னேற்றி நடத்தி வந்த காலத்தில் அரசு ரிசர்வ் வங்கி மற்றும் தேர்தல் ஆணையத்தை மட்டுமல்லாது மற்ற எல்லா அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசித்ததாக நாடகம் நடத்தியது.

மே 02, 2017-ல் நிதி அமைச்சர் ஜெயிட்லி அரசின் எதிர் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை முன்னேற்றவும் செயல் படுத்தவும் ஆலோசனை கேட்டு கடிதம் எழுதினார்.

காங்கிரஸின் நிதியாளர் மோதிலால் வோஹ்ரா எழுதிய பதிலின் படி "வெளிப்படைத் தன்மை என்பது தேர்தல் ஆணையம் கொடையாளர் யார், கொடை பெறும் கட்சி எது, அந்த கொடையின் மதிப்பென்ன என்பதை அறிய முடிய வேண்டும்.

"எந்த தீர்மானமான பதிவுகளும் இல்லாத திட்டம் உள்ளது. நிதி அமைச்சர் உரையும் பொது விளக்கங்களும் சொல்வதின் படி கொடுப்பவரின் பெயர், பெறுபவரின் பெயர் இவை வருமான வரி இலாக்காவுக்கு மட்டுமே தெரிய வரும்.

"அதாவது முடிவாக இந்த விவரங்கள் அரசுக்கு மட்டுமே தெரிய வரும். பொது மக்களுக்கு தெரிய வராது. அரசு வாக்குறுதி அளிக்கும் இந்தத் திட்டத்தை பற்றி நன்றாக ஆராய்ந்த பிறகே எங்கள் கருத்துக்களை வெளியிட முடியும, என்று வோரா கூறினார்.

அரசாங்கம் முன் வைக்கும் இந்த திட்டத்தைப் பற்றிய வரைவுத் திட்டத்தை அளித்தால் எங்களுக்கு உபயோகமாக இருக்கும், அதைப் பற்றி பாராட்டி சொல்லவும் முடியும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பதிலளித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தன்னால் இந்த திட்டத்தை நம்ப முடியாமல் போவதற்கு ஒரு விவரமான காரணம் கொடுத்தார்.

பல சட்டத் திட்டங்களில் நடை முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் அளிக்கும் கொடையின் ரகசியத் தன்மையை காக்கின்றன என்பது அவர் வாதம்.

”நாங்கள் இந்த ரகசிய அரசியல் பத்திரங்கள் திட்டத்தையும் பெரு நிறுவனங்கள் சட்டத்தில் அரசியல் கொடைகள் சம்பந்தமாக ஏற்படுத்தப் பட்டுள்ள மாறுதல்களையும் எதிர்க்கிறோம். இவற்றை திரும்பப் பெறவேண்டும் தவிர அரசியல் கட்சிகளுக்கான பெரு நிறுவனங்களின் கொடை அளவிற்கு நியாயமான எல்லை விதிக்க வேண்டும் எனவும் வற்புறுத்துகிறோம்.”

பா.ஜ.க.-வின் தோழமைக் கட்சியான ஷிரோமணி அகாலி தல் அரசியல் கொடையில் வெளிப்படைத்தன்மை கொணருவதில் எடுத்த மைல்கல் முடிவுக்காக அரசை பாராட்டியது. ஆனால் அதன் காரியதரிசி தல்ஜித் சிங் சீமா, லாபம் ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் அவற்றின் லாபத்தில் குறிப்பிட்ட விழுக்காடு மட்டும் கொடை வழங்க அனுமதிக்கப் படலாம் என்று இருப்பதே சரியான முடிவு என்று தெரிவித்தார்.

தேர்தல் பத்திரங்கள்: 2 ஆம் பாகம்

அகாலி தல்லின் இந்த கருத்துக்கள் பா.ஜ.க.-வின் நிதி நிலமைக் கூட்டத்தில் அது எடுத்த நிலைப்பாட்டுக்கு எதிர் மறையாக இருந்தன. பெரு நிறுவனங்களின் கடந்த மூன்றாண்டுகளின் சராசரி லாபத்தின் 7.5% மட்டுமே அரசியல் கொடையாகக் கொடுக்கப்படலாம் என்ற அனுமதிக்கப்பட்ட நிலையை அரசு நீக்கியது.

தேர்தல் பத்திரங்கள் பற்றிய அரசியல் கட்சிகளின் தவறான கணிப்புகள், மற்றும் தகவல் கேட்டு எழுப்பப்பட்ட விசாரணைகள் பற்றி அறிந்த நிதி அமைச்சகத்தின் திறமை மிக்க அதிகாரிகள் தங்கள் எஜமானர்களின் தேவைக்காக ஒரு திட்ட வரைதலை உருவாக்க முனைந்தார்கள்.

பின்னர் அந்த திட்ட வரைதல் மற்ற எல்லா அரசியல் கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டுமா என்று கேட்கப்பட்டபோது நிதி அமைச்சர் ஜெயிட்லி மௌனம் சாதித்தார். அதனால் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை என்று கருத்தில் கொள்ளப்பட்டது.

எதிர் கட்சிகளோடு நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தை, தேர்தல் பத்திரத் திட்டம் முறையான ஆலோசனைக்குப் பிறகே வகுக்கப்பட்டது என்று நிரூபிப்பதற்கான முயற்சியே.

இந்த நாடகத்தையே நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கி மற்றும் தேர்தல் ஆணையத்தோடு நடத்தியது.

(மொழிபெயர்ப்பு: சாந்தி பாலு)

(இந்த ரிப்போர்ட் முதலில் ஹஃப் போஸ்ட்-ல் வெளியானது. லிங் இங்கே.)

The Lede
www.thelede.in