தேர்தல் பத்திரங்கள்: 4 ஆம் பாகம்
த லீட் - தமிழில்

தேர்தல் பத்திரங்கள்: 4 ஆம் பாகம்

மத்திய அரசு பாரத ஸ்டேட வங்கியை காலாவதியான தேர்தல் பத்திரங்களை ஒப்புக் கொள்ள வைத்தது

Nitin Sethi

Nitin Sethi

மே 2018, கர்நாடகா தேர்தலுக்குப் பிறகு ரூ. 10 கோடி மதிப்புள்ள காலாவதியான தேர்தல் பத்திரங்களை அடையாளம் தெரியாத அரசியல் கட்சிகளுக்கு கொடுக்க கொடையாளர்களை அனுமதித்தன் மூலம் நிதி அமைச்சகம் பண மோசடிக்கு எதிரான ஒரு முக்கிய ஒழுங்கு முறையை மீறியது. இந்த செயல் கர்நாடகா மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைய காரணமாக இருந்தது.

இந்த பத்திரங்களைக் கையாளும் பாரத ஸ்டேட் வங்கியை, இந்த பத்திரங்களை வைத்துக் கொண்டிருந்த சில அரசியல் கட்சிகள் காலாவதியான பத்திரங்களை ஒப்புக் கொள்ளுமாறு கேட்ட போது நிதி அமைச்சகம் இந்த முடிவை எடுத்தது.

கர்நாடகா மாநில தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் தேர்தல் பத்திரங்களுக்கான பத்து நாட்களுக்கான சிறப்பு விற்பனையை அனுமதிப்பதன் மூலம் சட்டத்திற்கு எதிராக, நிதி அமைச்சகத்தின் சட்டதிட்டங்களை மாற்றுமாறு, நிதி அமைச்சகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் கொடுத்த குறிப்பினால் தான் இந்த பத்திர விற்பனை நடந்தது.

வெளிப்படைத் தன்மை ஆர்வலர் கமடோர் லோகேஷ் பாத்ரா, தகவல் அறியும் உரிமையின் படி பெற்ற ஆவணங்களில் இந்த காலாவதியான பத்திரங்களை வாங்கிய கொடையாளர்களின் பெயர்கள் மற்றும் இதை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பற்றிய தகவல்கள் இடம் பெறவில்லை.

கர்நாடகாவின் தெளிவான முடிவு இல்லாத மாநிலத் தேர்விற்குப் பிறகு வந்த குழப்பமான நாட்களில் பிரதமர் மோடியின் பாரதிய ஜனதா கட்சியும் எதிர்க் கட்சித் தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி மாற்ற முயல்வதாக ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டினர்.

பிரதமரின் ஆணைப்படி சட்டத்திற்கு விரோதமாக, நிதி அமைச்சரால் கையொப்பமிடப் பட்ட விதி விலக்கின் பெயரால், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் நிறைந்த அந்த நேரத்தில், காலாவதியான தேர்தல் பத்திரங்களின் ஏற்பு ஏன் ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், எதிர்க் கட்சிகள், வெளிப் படைத்தன்மை ஆர்வலர்கள் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் போன்ற தேர்தல் காவற்குழுவினர் ஆகியோரால் எதிர்க்கப் பட்டது என்று தெளிவாக விளக்குகிறது.

முதல் தேர்தல் பத்திர வெளியீட்டின் மூலம் வந்த நிதியில் 95% பா.ஜ.க-வுக்குச் சென்றது என்பது இங்கு குறிக்கப்பட வேண்டிய செய்தி.

இந்தியாவின் உச்ச நீதி மன்றம் தேர்தல் பத்திரங்கள் சட்டபூர்வமானவையா என்பது பற்றிய மனுவை இப்போது விசாரித்து வருகிறது. எதிர் கட்சிகளின் சட்ட நிபுணர்கள் தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவாதத்தை மக்களவையில் எழுப்பிய போது அங்கு இருந்த பிரதமர் மோதி அவர்கள் பதிலளிக்காமல் உட்கார்ந்திருந்தார்.

ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் பத்திரங்களை ஏன் எதிர்க்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மீறப்பட்ட சட்டங்கள்

2017 பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் அருண் ஜெயிட்லி தேர்தல் பத்திரங்கள் கருத்தை அறிமுகப் படுத்திய போது ரிசர்வ் வங்கி இந்தப் பத்திரங்கள் பண மோசடிக்கு வழி வகுக்கும் என்று எச்சரித்தது.

திட்டத்தின் செயல்பாடு: பாரத ஸ்டேட வங்கி தேர்தல் பத்திரங்களை விற்கும் உரிமை பெறும். அவை பெரு நிறுவனங்கள், தனி மனிதர்கள், டிரஸ்ட் அல்லது அரசு சாரா நிறுவனங்களால் வாங்கப் படக்கூடிய பேரர் (தாங்கி) பத்திரங்கள், அதாவது சாதாரணத் தாள்களாக இருக்கும். கொடையாளர்கள் அவற்றை தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்குக் கொடுக்கலாம்.

அரசியல் கட்சிகள் பத்திரங்களை அதற்கென்று குறிக்கப்பட்ட கணக்குகளில் டெபாசிட் செய்யும்.

முன்னர் குறிப்பிட்ட படி , ரிசர்வ் வங்கி இந்த திட்டத்தை கடைசி வரை எதிர்த்து வந்தது. கடைசியில் பண மோசடியைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இரண்டு முக்கிய முன்னெச்சரிக்கைகளை சிபாரிசு செய்தது.

பத்திரங்கள் கொடையாளர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை “விண்டோஸ்” எனப்படும் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே விற்கப் படலாம், அதோடு பத்திரங்கள் அவற்றைப் பெறும் அரசியல் கட்சிகளால் வாங்கப்பட்ட 15 நாட்களுக்குள் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட வேண்டும்.

ஜனவரி 2018 ல் நிதி அமைச்சர் தேர்தல் பத்திரங்கள் வாங்குவது மற்றும் விற்பது சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்களை வெளியிட்டார். அதன் படி குறிப்பாக --

“பாரத ஸ்டேட் வங்கியால் பத்திரங்கள் ஒரு ஆண்டில் நான்கு முறை விற்கப்படும், அதோடு பொது தேர்தல் ஆண்டுகளில் அதிக படியாக 30 நாட்களுக்கு விற்பனை அனுமதிக்கப் படும். விற்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் அவை வங்கியில் மாற்றப்பட வேண்டும்.”

ஆனால் 2018 ல் கர்நாடக மாநிலத் தேர்தலுக்கு சற்று முன்பாக பிரதமர் மோடியின் அலுவலகம் மே 1 - 10 வரையிலான பத்து நாட்களுக்கு திட்டமிடப்படாத பத்திர வெளியீட்டுக்கு விண்ணப்பித்தது. அதன் மூலம் அநாமதேய கொடையாளர்கள் பத்திரங்கள் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுக்கலாம்.

மே 23, 2018 ல் பாரத ஸ்டேட் வங்கியால் அனுப்பப்பட்ட குறிப்பின் படி சில பத்திர உரிமையாளர்கள் ரூபாய் 20 கோடி மதிப்பிலான பத்திரங்களுடன் ஸ்டேட் வங்கியின் புது டில்லியின் முக்கிய கிளையை அணுகினார்கள்.

தேர்தல் பத்திர உரிமையாளர்கள் என்பது அரசியல் கட்சிகளின் கணக்கில் சேர்ப்பதற்காக தேர்தல் பத்திரங்களை கையில் வைத்திருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைக் குறிக்கிறது.

அவற்றில் பாதி மே 3, 2018 லும், மறு பாதி மே 5, 2018 லும் வாங்கப்பட்டவை. அவை இரண்டுமே காலாவதியானவை ஏனென்றால் அவற்றை கணக்கில் சேர்ப்பதற்கான 15 நாள் காலண்டர் காலம் முடிவடைந்திருந்தது.

ஆனால் பத்திர உரிமையாளர்கள் 15 காலண்டர் நாட்கள் என்னும் விதி தளர்த்தப்பட வேண்டும், ஏனென்றால் பத்திரங்கள் வங்கியின் 15 வேலை நாட்களுக்குள் சமர்ப்பிக்கப் பட்டிருக்கின்றன என்று விண்ணப்பித்தார்கள்.

தேர்தல் பத்திரங்கள்: 4 ஆம் பாகம்

பாரத ஸ்டேட் வங்கியின் கிளை தனது நிறுவன தலமை அலுவலகத்தை அதே நாளில் தொடர்பு கொண்டது என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

மே 24, 2018 அன்று வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார் சார்பாக, உதவி நிர்வாக இயக்குநர் மிருத்யுஞ்செய் மகாபாத்ரா, நிதி மந்திரிக்கு காலாவதியான பத்திரங்களின் மீட்புக்கு ஒப்புக் கொள்ள வேண்டுமா என்று கேட்டு கடிகம் எழுதினார்.

பாரதிய ஸ்டேட் வங்கியின் தலைவர் சார்பாக எழுதப்பட்ட கடிதத்தில் மகாபாத்ரா, “தேர்தல் பத்திரங்களை வைத்திருக்கும் சிலர் பத்திரங்களின் மதிப்புக் காலம் 15 வேலை நாட்கள் என்ற கருத்துடன் எங்களை அணுகி இருக்கிறார்கள். எனவே அதனுடைய மதிப்புக் காலம் வாங்கப்பட்ட நாளிலிருந்து 15 வேலை நாட்களா அல்லது 15 காலண்டர் நாட்களா என்று விளக்குமாறு விண்ணப்பிக்கிறோம்,“ என்று கேட்டார்.

தேர்தல் பத்திரங்கள்: 4 ஆம் பாகம்

நிதி அமைச்சகம் மிகவும் எச்சரிக்கையுடன் செயல் பட்டது. கடிதம் பெறப்பட்ட அதே நாளில் ஒரு அதிகாரி அதற்கு பதில் எழுதினார்.

பொருளாதார விவகாரத் துறை அமைச்சகத்தின் உதவி இயக்குநர் விஜயகுமார், “குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனை காலம் என்பது வாங்கியதற்கும் டெபாசிட் செய்வதற்கும் இடையில், வங்கி இயங்காத நாட்களையும் சேர்த்து, மொத்தமாக 15 நாட்கள் என்பதே,” என்று சொன்னார்.

எனவே விதிகளின் படி அந்தப் பத்திரங்கள் காலாவதியானவை. அந்தத் தொகை பிரதமரின் நிவாரண நிதி எனப்படும் அரசு தொண்டு நிதியில் சேர்க்கப்பட்டு பாகு பாடற்ற முறையில் இயற்கை சீற்ற இடர்பாடுகளின் போது நிவாரணம் வழங்க உபயோகப்படுத்தப் பட வேண்டும்.

ஆனால் உதவி இயக்குநர் குமார் இதோடு நிறுத்தவில்லை.

“இதற்கு முன்பு தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்ட போது சில விளக்கங்கள் முழுவதுமாகத் தரப்படாததால் பாரத ஸ்டேட் வங்கி மே 10, 2018 தேதிக்கு முன்னால் வாங்கப்பட்ட பத்திரங்கள் வாங்கப்பட்ட பிறகு 15 வேலை நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட்டால் ஒப்புக் கொள்ளலாம். ஆனால் எதிர் காலத்தில் இந்த சலுகை கொடுக்கப்படாது.”

இந்தக் கடிதம், பொருளாதார நிர்வாகத் துறையின் செயலாளர் எஸ். சி. கார்க் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தப் பதிவு பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு அதே நாளில் அனுப்பப்பட்டது.

தேர்தல் பத்திரங்கள்: 4 ஆம் பாகம்

பாரத ஸ்டேட் வங்கியின் தலமை அலுவலகம் அதே நாளில் அதன் புது தில்லி கிளைக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தது. அந்த நாள் முடிவதற்குள் அரசியல் கட்சி அல்லது மற்ற கட்சிகளால் மே 5, 2018 ல் வாங்கப்பட்ட ரூ 10 கோடி பெறுமான பத்திரங்களை ஏற்றுக் கொண்ட்து.

மே 3, 2018 ல் வாங்கப்பட்ட ரூ 10 கோடி மதிப்பிலான பத்திரங்கள் நிதி அமைச்சரின் இந்த விதி விலக்குக்கு உட்பட்ட அனுமதிக்குள் வராததால் பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்பப்ப்டடதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

இது சம்பந்தமான ஆவணங்களை வெளிக் கொணர்ந்த வெளிப்படைத் தன்மை ஆர்வலர் லோகேஷ் பாத்ரா, “இவ்வளவு எச்சரிக்கையுடனும், துரிதமாகவும் ஆதரவு அளிக்கப்பட்ட அரசியல் கட்சி எது,” என்று கேட்கிறார்.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களும் மற்ற ரகசியங்களும் இதுவரை பொது மக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கான விடை, நிதி அமைச்சர் தனக்கு அனுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் சொன்னால் மட்டுமே தெரிய வரும்.

(மொழிபெயர்பு: சாந்தி பாலு)

(இந்த ரிப்போர்ட் முதலில் ஹஃப் போஸ்ட்-ல் வெளியானது. லிங் இங்கே.)

Read Parts 1, 2 & 3 of the series here.

The Lede
www.thelede.in