தேர்தல் பத்திரங்கள்: 6 ஆம் பாகம்
த லீட் - தமிழில்

தேர்தல் பத்திரங்கள்: 6 ஆம் பாகம்

கொடையாளர்கள் நிதி மாற்ற முறையில் ரகசியம் காக்கக் கோரினார்கள் என்று பொய் சொன்னதாக மத்திய அரசு ஒப்புக் கொண்டது

Nitin Sethi

Nitin Sethi

2017ல் அநாமதேய பெருநிறுவனங்களும் தனி மனிதர்களும் டிரஸ்ட்களும் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதற்கான தேர்தல் பத்திரங்களை வெளியிட்ட போது நிதி அமைச்சர் தன் தீர்மானத்தை நியாயப் படுத்துவதற்காக “கொடையாளர்கள் காசோலை மற்றும் அதைப் போன்ற மற்ற வெளிப் படையான முறைகளில் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதற்குத் தயங்குகிறார்கள், ஏனென்றால் அது அவர்களது அடையாளத்தை வெளிப்படுத்தி சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்,” என்று கூறினார்.

அதிலிருந்து ஆளும் கட்சியான பாரதீய ஜனதாவின் உறுப்பினர்கள் ரகசியத் தன்மை காக்க விரும்பிய பெயர் தெரியாத இந்தக் கொடையாளர்கள் குழுவைப் பற்றி பலமுறை குறிப்பிட்டார்கள். ஒரு வியாழன் அன்று யூனியன் மந்திரி பியூஷ் கோயல் தேர்தல் பத்திரங்கள் விசாரணை சம்பந்தமான செய்தியாளர்கள் சந்திப்பில் இதே கருத்தை வெளியிட்டார்.

பியூஷ் கோயலின் செய்தியாளர்கள் சந்திப்பிற்குப் பிறகு பிஜேபி யால் விநியோகிக்கப் பட்ட செய்தி குறிப்பு கொடையாளர்கள் தங்களது அரசியல் நிதி அளிப்பு அரசியல் பழிவாங்கும் செயலுக்கு வழி வகுக்கும் என்பதால் அதை வெளியிடத் தயங்குகிறார்கள் என்று குறிப்பிட்டது.

ஜெயிட்லியின் உரைக்கு மூன்றாண்டுகளுக்குப் பிறகு, அதாவது ரூபாய் 6108.47 கோடி மதிப்பிலான பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு அநாமதேய கொடையாளர்களால் கொடுக்கப் பட்ட பிறகு, நிதி அமைச்சகம் எந்தக் கொடையாளரும் எப்போதும் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க, ஊடுருவ முடியாத ஒரு திட்டத்தை உருவாக்கும் படி அரசைக் கேட்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டது.

வெங்கடேஷ் நாயக் அவர்களின் தகவல் பெறும் உரிமை கோரிக்கைக்கு பதிலளிக்கையில் கொடையாளர்களிடமிருந்து அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும் போது அவர்கள் அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்கக் கோரி எந்த விதமான பிரதிநிதித்துவம், மனு அல்லது கடிதத் தொடர்பும் பெறப் படவில்லையென்று நிதி அமைச்ச்கம் ஒப்புக்கொண்ட்து.

தகவல் பெறும் உரிமைக்கு பதிலளிக்க நிதி அமைச்சகம் கட்டாயப் படுத்தப் பட்டதாலேயே அது பதிலளித்ததே ஒழிய தானாகவே முன் வந்து பதிலளிக்கவில்லை. நாயக் ஜூலை 2017 ல் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். சட்டப் படி அமைச்சகம் 30 நாட்களுக்குள் பதில் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் முதல் ஒரு மாதத்தில் பதில் இல்லாத மௌனத்தை சந்திக்க வேண்டியதாயிற்று. ஆனால் அவர் மறுபடியும் விண்ணப்பித்ததும் நிதி அமைச்சகம் வேறு விதமான தாமதிக்கும் தந்திரத்தை கையாண்டது. நாயக் அவர்களின் விண்ணப்பத்தை சுமார் ஐந்து மாத காலத்துக்கு பல இலாக்காக்களுக்கும் மாற்றி மாற்றி அனுப்பி வைத்தது.

ஜனவரி 2018ல் நாயக் இறுதியாக மத்திய தகவல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் நிதி அமைச்சகத்தை பதில் அளிக்குமாறு ஆணையிட்டனர். அதற்குப் பிறகு ஒரு வருடம் மற்றும் பத்து மாத கால தாமதத்துக்குப் பிறகே பதில் கிடைத்தது: அதாவது யாருமே அரசாங்கத்தை அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும் ரகசிய முறையை உண்டாக்குமாறு கேட்டு அணுகவில்லை. அதாவது முன்னாள் நிதி அமைச்சர் ஜெயிட்லி மக்களவையில் தேர்தல் பத்திரங்கள் முறையை உருவாக்குவதற்காக மற்றொரு பொய்யை கூறியுள்ளார்.

நாயக்கின் தகவல் அறியும் உரிமை மனுவின் கேள்வி பிரதம மந்திரி மோடி அரசாங்கம் தேர்தல் பத்திரங்கள் முறையை உருவாக்குவதற்காக எந்த பிரதிநிதிகளாலும் அணுகப் படவில்லை என்பதை நிரூபிக்கிறது. தகவல் அறியும் உரிமையின் மூலம் பெறப்பட்ட கமடோர் லோகேஷ் பாத்ராவின் பங்களிப்பான, தேர்தல் பத்திரங்கள் சம்பந்தப் பட்ட ஆவணங்கள் ஒரு அடையாளம் காட்டப் படாத பிரதிநிதியின் முறைசாரா கடிதம் கிடைக்கப் பட்டதை வெளிப் படுத்துகிறது.

இந்தக் குறிப்பு , முன்னமே குறிப்பிட்டபடி A4 காகிதத்தில் ,தேதி, கையெழுத்து, முத்திரை, விலாசம் எதுவும் இல்லாத கடிதத்தில் அச்சிடப் பட்டு இருக்கிறது.

அரசு பதிவுகள் குறித்த வழிமுறைகளின் கீழ் கையொப்பமில்லாத ஆவணங்களுக்கு இடமில்லை என்று தன் அடையாளத்தை வெளியிட விரும்பாத நிதி அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி சொன்னார். “உண்மையிலேயே யாரோ ஒருவர், அநாமதேய நன்கொடையை பரிந்துரைத்திருக்கலாம். பொருளாதார விவகாரங்கள் துறை, வருவாய் துறை போன்ற மற்ற எல்லா துறைகளையும் இது பற்றி எந்தக் கருத்தும் கேட்கவில்லை. வருவாய் துறைதான் இந்த பயிற்சியை துவக்கி வைத்தது. தேர்தல் பத்திரங்கள் கருத்துருவாக்கம் சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தும் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்றே தோன்றுகிறது.”

வெளிப் படைத் தன்மை ஆர்வலர் லோகேஷ் பாத்ராவைப் பொறுத்தவரை இந்த தாக்கம் நிறைந்த வெளிப்பாடுகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் சக்தியை நிரூபிக்கும் தன்மை கொண்டவை. ஆனால் மோடி அரசாங்கம் அதை வலுவிழக்கச் செய்ய தன்னால் முடிந்ததை செய்து வருகிறது.

வெளிப் படைத்தன்மைக்காக தேர்தல் பத்திரங்களை அறிமுகப் படுத்துவதாகக் கூறிய பிஜேபியும் மற்றக் கட்சிகளும் மத்திய தகவல் ஆணையத்தின் 2013 உத்தரவை மதித்து நடக்கவில்லை என்பது மனம் தடுமாறச் செய்யும் உண்மையாகும்.

“2013ல் பிறப்பிக்கப் பட்ட இந்த உத்தரவு அரசியல் கட்சிகளை தகவல் அறியும் சட்டத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தது. அதனால் அரசியல் நிதிப் பங்களிப்பில் வெளிப்படைத் தன்மை நிச்சயப் படுத்தப் பட்டது. இந்த நிலையில் அரசியல் நிதிகளுக்கான வெளிப் படைத் தன்மைக்கான திட்டம் கொண்டு வரப் பட்டதின் உண்மையான காரணங்கள் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாக எனக்குத் தோன்றியது,” என்று லோகேஷ் பாத்ரா கூறுகிறார்.

இந்த நிலையில் பாத்ராவின் கேள்விகள், பாரத ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், மற்றும் பல எதிர்க்கட்சிகள் தேர்தல் பத்திர வெளியீட்டை எப்படி எதிர்த்தன என்ற கசப்பான உண்மையை வெளிப் படுத்தின. மோடி அரசாங்கத்தின் மந்திரிகள் மக்களவையில் எப்படியெல்லாம் பொய் சொன்னார்கள், பிரதம மந்திரியின் அலுவலகம் தேர்தல் பத்திரங்களுக்கான சிறப்பு வெளியீட்டுக்காக நிதி அமைச்சகத்தின் சட்டங்களை எப்படி தகர்த்தது, மற்றும் நிதி அமைச்சகம் காலாவதியான பத்திரங்களை மாற்றுவதற்காக தனது சட்டங்களை எப்படி தானே மீறியது என்ற பல உண்மைகள் தெரிய வந்துள்ளன.

இந்த விவரங்கள் புதிதாக பல கேள்விகள் எழுப்பப் பட வாய்ப்பளித்துள்ளன.

• நிதி அமைச்சகத்தின் எந்தத் துறை தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உருவாக்கியது?

• தேர்தல் பத்திரங்கள் உருவாக்கம் சம்பந்தமாக திருத்தங்கள் கொண்டு வரும் திட்டங்கள் சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை மீது மேற்கொள்ளப் பட்டதா?

• தேர்தல் ஆணையம் தனது ஆட்சேபணைகளுக்கு ஓர் ஆண்டு காலத்திற்கு பிறகும் பதில் அளிக்கப் படாத நிலையில் அவற்றின் மீதான நடவடிக்கைகளை ஏன் தொடரவில்லை?

• தேர்தல் ஆணையத்தின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் கடிதத்தை ஏன் இந்திய அரசாங்கம் மறைத்தது?

இந்த உண்மைகள் வெளிவருவதற்கு உதவக் கூடிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே மோடி அரசாங்கம் வலுவிழக்கச் செய்து வருவதால் மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில் பெறுவது மேலும் மேலும் கடினமாக ஆகலாம்.

(மொழிபெயர்ப்பு: சாந்தி பாலு)

(இந்த ரிப்போர்ட் முதலில் ஹஃப் போஸ்ட்-ல் வெளியானது. லிங் இங்கே.)

Read Parts 1 to 5 here.

The Lede
www.thelede.in