கொரோனா எண்ணங்கள்
Representative image of lockdown

கொரோனா எண்ணங்கள்

இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப சற்றுத் தடுமாறுவேன் என்று தோன்றுகிறது

2020 நியூ இயர் அன்று இப்படி ஒரு நிலமையை சந்திப்போம் என்று யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டோம். புது வருடத்தில் செய்ய வேண்டுமெனப் போட்டு வைத்த லிஸ்ட் கேட்பாரற்றுக் கிடக்கிறது. எத்தனை பயணங்களுக்கான திட்டங்கள் போட்டிருந்தேன். மாடியில் கட்டிய அறையில் ஆங்கில பேச்சுப் பயிற்சி மற்றும் பல வகுப்புகளுக்கான ஐடியா வைத்திருந்தேன். கார்டனிங்கில் அடுத்த லெவலுக்குக் கொண்டு போவதற்கான திட்ட்ங்கள் ஆரம்பித்திருந்தேன்.

என்னுடைய டூ வீலர் பழையதாகி விட்ட்தால் புதிதாக என்ன வண்டி வாங்கலாம் என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். கிரியேட்டிவ் ரைட்டிங் என்று புதிதாக ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்திருந்தேன். வீட்டிற்குப் பெயிண்ட் அடிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தோம். மூன்று வருடங்களாக கொலு வைக்க முடியாமல் சிங்கப்பூரில் பிள்ளைகளுடன் இருந்து விட்டதால் இந்த வருடம் கண்டிப்பாக கொலு வைக்க் வேண்டும், பிள்ளைகள் கூப்பிட்டால் என்ன காரணம் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் இப்பொது உள்ள நிலமையில் இது எதுவுமே முக்கியமில்லை, முடியவும் முடியாது என்று தோன்றுகிறது. ஆனால் இந்த வாழ்க்கை முறையும் ஒரு வித்த்தில் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. என்னுடைய தேவைகளை இவ்வளவு சுருக்கிக் கொள்ள முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. வேலையாட்கள் வரவில்லையென்றால் வரும் கோபம் அர்த்தமற்றதாக தோன்றுகிறது. அவர்களின் தயவு இல்லாவிட்டால் எப்படி சமாளிப்போம் என்று பிரமிப்பாக இருந்தது போக அவர்கள் இல்லாமல் இருப்பதில் ஒரு நிம்மதியும், சமாளிக்கும் என் திறமை பற்றின பிரமிப்பும் தோன்றுகிறது. வெளியில் எங்கும் போக முடியாது என்பது ரொம்ப நாளாக செய்ய நினைத்து செய்யாமல் போன விஷயங்களில் கவனம் செலுத்த உதவுகிறது. எல்லா நண்பர்கள் உறவினர்களுடன் தொடர்பை வலுப்படுத்தி கொள்ள நிறைய நேரம் கிடைத்திருக்கிறது. எந்தப் பொருளும் வீணாக்காமல் கவனமாக இருக்கப் பழகி விட்டது.

மனிதனுக்கும் இயற்கைக்குமான போரில் யாருக்கு வெற்றி என்பது கேள்விக்குரியாக இருக்கும் இந்த நேரத்தில் நாம் இதுவரை செய்த்தெல்லாம் சரிதானா என்று கேள்வி வருகிறது. என் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை வரும்போதே பெட்ரோல், காஸ் துறையினால் இயற்கைக்கு ஏற்பட்ட நாசத்திற்கு அவர்களின் பங்கும் உண்டு என்னும் உண்மை நினைவிற்கு வருகிறது. யாரிடமும் எதற்கும் கோபமும் வருத்தமும் அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.

ஆனால், ஒரு விஷயம் மனதில் உறுத்துகிறது. நானும் பொழுதைக் கழிக்க சமையல், தையல், வரைதல், பழைய கதைகள் அசை போடுதல், பேசுதல் எல்லாம் செய்கிறேன், ஆனால் உற்சாகமூட்டுவதாகச் சொல்லிக்கொண்டு தினுசு தினுசாக சமைத்து அதை படம் எடுத்துப் போட்டுக் கொண்டு, பிறந்தது முதலான பழைய கதைகளையும், தன் சாமர்த்தியத்தையும் சோஷியல் மீடியாவில் பிரசுரித்துக் கொண்டு, அரைகுறையான விவரங்களின் அடிப் படையில் கருத்துப் பரிமாறிக் கொண்டு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயலுபவர்கள் பற்றி எனக்கு சற்று ஆற்றாமையாக இருக்கிறது. அது பற்றிய என் கருத்தை வெளியிடுவதும் நாகரிமல்ல என்றும் புரிகிறது.

கொரோனா பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் இருந்த தீவிரம் வெகுவாகக் குறைந்து விட்ட்து. யார் சொல்வது சரி அல்லது தவறு என்று குழப்பம் ஏற்ப்ட்டிருக்கிறது. மனிதனின் இயலாமை வேதனையளிக்கிறது. எதிர் காலத்தின் பொருளாதார பிரச்சனைகளின் சாத்தியக் கூறு பயமுறுத்துகிறது.என் சக்திக்கு மீறிய தொகையை நம்பிக்கைக்குரிய குழுக்களிடம் டொனேஷனாக்க் கொடுத்து விட்டு நான் அமைதியாக இருக்கிறேன். யாராவது நான் எந்த விதத்திலாவது உதவ முடியும் என்று அழைத்தால் வரத் தயாராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நம்பிக்கையளிக்கும் செய்திகளை மட்டுமே நம்ப விரும்புகிறேன்.

இந்தக் கட்டுப் பாடுகள் பல விதத்திலும் பிரச்சனையாக இருந்தாலும் இது முடிந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப சற்றுத் தடுமாறுவேன் என்று தோன்றுகிறது. இந்த எளிய வாழ்க்கை முறையில் தான் என் ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது.விபத்தில் தனித்தீவில் மாட்டிக் கொண்டு வாழப் பழகி அதை ரசிக்க ஆரம்பித்து விட்டவர் போன்ற மனநிலையில் இருக்கிறேன். பள்ளி திறந்து நண்பர்களை சந்திக்கும் ஆர்வம் இருந்தாலும் விடுமுறை முடிந்து விடும் என்னும் வருத்தம் இருக்கத் தானே செய்யும்!

(By Shanthi Balasubramanian, Chennai)

No stories found.
The Lede
www.thelede.in